இந்தியா

“வன்முறை ஒருபோதும் தீர்வாகாது” - டெல்லி சம்பவங்கள் குறித்து அன்னா ஹசாரே கருத்து

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது” என்று சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே இன்று மகாராஷ்டிராவின் அஹில்யானகரில் இரண்டு மணி நேர மவுனப் போராட்டம் நடத்தினார். அவர் தனது போராட்டத்தை காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு செய்தார். அஹில்யானகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே இந்தப் போராட்டத்தை நடத்திய ஹசாரே, பின்னர் தனது கிராமமான ரலேகன் சித்திக்குத் திரும்பினார்.

இந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்துப் பேசிய அவர், “நரேந்திர மோடி நாட்டின் ஒரு முக்கிய தலைவர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினேன். வன்முறை ஒருபோதும் முன்னேற்றத்துக்கான வழி அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

சிஜேபி நடத்திய போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும், நடந்தவை அனைத்தும் தவறானவை. என் வாழ்நாளில் நான் 22 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவற்றில் எதிலுமே வன்முறை நிகழ்ந்ததில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசின் பிரதிநிதிகள் ஜந்தர் மந்தரில் போராடுபவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில், ‘வன்முறை மற்றும் காவல் துறை நடவடிக்கை குறித்த செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. ஜனநாயகத்தில் வன்முறை, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் தேவையற்ற பலப்பிரயோகம் ஆகியவற்றுக்கு இடமில்லை.

வினாத்தாள் கசிவு, ஆள்சேர்ப்பு செயல்முறைகளில் தாமதம், வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இளைஞர்களுக்கு உள்ள கவலைகளை, வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளாக மட்டும் பார்க்கக் கூடாது. அவற்றை சமூக கவலை மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால், அது அரசாங்கத்தைக் கவிழ்த்து விடாது. மாறாக, அதன் செயல்பாட்டை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும். ஜனநாயகத்தில் மோதலை விட பேச்சுவார்த்தையே சிறந்த வழியாகும். எனவே, மக்களின் குரலை எதிர்க்கட்சியின் குரலாகப் பார்க்க வேண்டாம்.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால், அவை பேச்சுவார்த்தை, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். முறைகேடுகள் அல்லது ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம், பெரும்பாலும் கீழ்மட்ட அதிகாரிகள் மீதே பொறுப்பு சுமத்தப்படுகிறது. ஆனால், உயர் பதவிகளில் இருப்பவர்களே இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்க வேண்டும். பல நாட்களாகப் போராட்டம் தொடர்ந்தும், அரசாங்கப் பிரதிநிதியோ, அதிகாரியோ ஏன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT