கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. சப்ரா, சாந்திப்பூர், நிம்தாலா மற்றும் பங்கர் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், வாக்கு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இந்த வன்முறைகள் நடைபெற்றது.
முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பார்வையிட்டார். இங்கு இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
வாக்குச் சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தல் பார்வையாளர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் பாஜகவினர் உத்தரவுப்படி செயல்படுகின்றனர். அனைத்து கட்சி கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. 70-வது வார்டு கவுன்சிலரை வெளியேவர அவர்கள் அனுமதிக்கவில்லை. எங்கள் கட்சி தொண்டர்களை எல்லாம் பிடித்துச் சென்று விட்டனர்.
பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். நானும், பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் இரவு முழுவதும் விழித்திருந்தோம். இவ்வாறு அவர் கூறினார். 2-ம் கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.