இந்தியா

மருது சகோதரர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் நினைவஞ்சலி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: விடுதலைப் போராட்ட மாவீரர்களான மருது சகோதரர்களது நினைவு நாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (அக்.24) குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.

மருது சகோதரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரை துச்சமெனக் கருதியவர்கள் மருது சகோதரர்கள்.

வீரத்துடன் போராடிய விடுதலைப் போராட்ட மாவீரர்களான மருது சகோதரர்களின் நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன்.

1801-ஆம் ஆண்டு இதே நாளில், இம்மண்ணின் மாண்பையும் தன்மானத்தையும் மகத்தான பாரம்பரியத்தையும் காக்கப் போராடியவர்கள் இவர்கள். சிவகங்கைச் சீமையை ஆண்ட இந்த வீரமிகு மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

அந்நிய ஆட்சிக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட ‘ஜம்புத்தீவு பிரகடனம்’ விடுதலை வேட்கையையும் மக்களை ஒன்றிணைக்கும் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது.

இந்த மகத்தான தியாக நாளில், விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, ஆன்மிகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT