இந்தியா

‘தமிழகம் வீறுநடை போட காரணமாக இருந்தவர் காமராஜர்’ - சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தி வணங்கினார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: தேசியப் பெருந்தலைவர் காமராஜர், இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தவர். மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்; அறிந்துகொள்ள விரும்பாதவர். தன் வாழ்நாளெல்லாம் காந்திய சிந்தனையோடு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவர் இயற்கை எய்தியது, “மனம்போல் வாழ்வு” என்கிற மகத்தான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

அவர் சாலைகளை அமைத்தார், கல்விச்சாலைகளை அமைத்தார். அவர் மதிய உணவைத் தந்தார். ஏழைகள் வாழ்வில் ஒரு புதிய ஒளியை உருவாக்கினார். அணைகளைக் கட்டினார். தொழிற்பேட்டைகளை அமைத்தார். தமிழகம் இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக வீறுநடை போடுகிறது என்றால் அதற்குக் காரணம் பெருந்தலைவர் காமராஜர்தான்.

அவர் கட்டியமைத்த கல்விச்சாலைகள், அணைகள், தொழிற்பயிற்சிக் கல்லூரிகள், தொழிற்பேட்டைகள், இந்த மண்ணில் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் ஓங்கி வருவதற்குக் காரணமாகும். பெருந்தலைவர் புகழ் இந்த மண்ணில் என்றைக்கும் வாழையடி வாழையாக ஜீவிதமாய் நிலைத்திருக்கும். பெருந்தலைவர் வாழ்க! இவ்வாறு அவர் புகழஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT