இந்தியா

“விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” - கார்கே குற்றச்சாட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மத்திய அரசின் 'விபி ஜி ராம் ஜி’ (VB GRAM G) திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மோடி அரசு முழுமையாக கொல்வதற்கு முன்பாகவே, வேலை செய்வதற்கான உரிமையை நசுக்கி, கோடிக்கணக்கான ஏழை மக்களை துன்புறுத்தி வருகிறது.

சமீபத்திய அறிக்கையின்படி, 44 லட்சம் குடும்பங்களுக்கு குறைவாகவே வேலை கிடைத்துள்ளது. 67 லட்சம் தொழிலாளர்களுக்கு குறைவாகவே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முழுமையாக 100 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற்ற குடும்பங்கள் 40.5% ஆக குறைந்துள்ளது. வேலை செய்வோரின் எண்ணிக்கையில் 21.5% சரிவு ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக ரூ.1,221 வருமான இழப்பைச் சந்தித்துள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான 'விபி ஜி ராம் ஜி’ திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் செய்வதறியாது அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை பாஜக அரசு நிறுத்திவைத்துள்ளது. மறுபுறம், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் மீது 40% நிதிச் சுமையை அது சுமத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில முதலாளிகளின் நண்பனாக இருக்கும் பாஜக அரசு, ஏழைகளின் உரிமைகளை நசுக்குவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஏழைகள் மீது அவர்களுக்கு இருக்கும் உண்மையான எண்ணத்தை இது அம்பலப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT