இந்தியா

கர்நாடக பேரவையில் 2 பத்திகளுடன் முடிந்த ‘வந்தே மாதரம்’ பாடல் - பாஜக எம்எல்ஏக்கள் கண்டனம்

மோகன் கணபதி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது ‘வந்தே மாதரம்’ பாடலின் இரண்டு பத்திகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஒலிக்கப்பட்டன. பாடல் அத்துடன் நிறுத்தப்பட்ட நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முழு பாடலையும் பாடினர்.

கர்நாடகாவில் நிலவும் வறட்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மாலையின் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகள் குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கை ஆகியவை குறித்து விவகாதிக்க கர்நாடக சட்டமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் தொடங்கியது.

பதிவு செய்யப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிபரப்பின் மூலம் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், பாடலின் இரண்டு பத்திகள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு முடிவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜி.எஸ். பாட்டீல், மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வை அனுமதித்தார். ஆகஸ்ட் 27 அன்று காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. ஷிரியன்னவருக்கு முதல்வர் டி.கே. சிவக்குமார் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்.

‘வந்தே மாதரம்’ பாடல் இரண்டு பத்திகளுடன் நிறுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்தையும் பாடத் தொடங்கினர்.

இதேபோல், கர்நாடக சட்ட மேலவையிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் இரண்டு பத்திகளுடன் முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னர், வழக்கமான நடைமுறைப்படி மேலவைத் தலைவர் சலீம் அகமது அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்கத் தொடங்கினார். எனினும், பாஜக உறுப்பினர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலின் மீதமுள்ள வரிகளைத் தொடர்ந்து பாடினர். ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக ஒலிபரப்பப்படாததற்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்று கர்நாடகவின் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT