இந்தியா

வாராணசி-டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்

பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

வாராணசி: வாராணசி-டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை நேற்று தொடங்கியது. இதை வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய ரயில்வேயின் அதிநவீன பயணப் புரட்சியாகக் கருதப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்களில், இரவு நேர பயணங்களுக்காக படுக்கை வசதி (ஸ்லீப்பர்) கொண்ட புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ரயிலின் முதல் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா - அசாமின் காமாக்யா இடையே கடந்த ஜன.17-ம் தேதி தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக ஆன்மிக நகரான காசியை (வாராணசி) தலைநகர் டெல்லியுடன் இணைக்கும் 2-வது ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. வாராணசியில் நடைபெற்ற விழாவில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லிக்கும் காசிக்கும் இடையே ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு

மிக்க நாள். காசி-டெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்கப்படுவதால், நேரம் மிச்சமாவது மட்டுமல்லாமல், அவர்களின் பயண அனுபவமும் மேம்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவைக்காக அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் ஏசி வசதியுடன் கூடிய 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், 3-ம் வகுப்பு 2-ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு என 3 படுக்கை வசதி வகுப்புகளை வழங்கும். இதில் 823 பயணிகள் பயணிக்க முடியும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT