இந்தியா

“உத்தரப் பிரதேசம் நான்காக பிரிக்கப்படும்” - அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு

வேட்டையன்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நான்காக பிரிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியுள்ளார்.

இது குறித்து அம்பேத்கர் நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியிருந்தார். “வரும் நாட்களில் நம் மாநிலம் நான்காக பிரிக்கப்படும். பூர்வாஞ்சல் என்ற மாநிலம் உருவாகும் போது, அதன் முதல் முதல்வராக ராஜ்பார் சமூகத்தை சேர்ந்தவர்தான் இருப்பார்.

நீங்கள் களப்பணி செய்யும் போது இதை கருத்தில் கொள்ளுங்கள். நம் இளம் தலைமுறையினர் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரஸ் கட்சிகளில் இணைந்து வழி தவற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

ராஜ்பார் எனும் சாதி, ஓபிசி பிரிவின் கீழ் அம்மாநிலத்தில் வருகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அதிகம் உள்ளனர். அதனால் அந்த பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் அரசியல் ரீதியாக அவர்களது வாக்கு சதவீதம் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் ஓம் பிரகாஷ் இதனை தெரிவித்துள்ளார். ஸுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான அவர், பூர்வாஞ்சல், மத்யாஞ்சல், புந்தேல்கண்ட், ஹரித் பிரதேஷ் என நான்காக உத்தரப் பிரதேசம் பிரிக்கப்படும் என்று கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்து மத்தியிலும், உ.பி மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

இந்திய தேசத்தின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது உத்தரப் பிரதேசம். கடந்த 2000-வது ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தராகண்ட் தனி மாநிலமாக பிரிந்தது. தொடர்ந்து கடந்த 2007-ல் அப்போதைய உ.பி முதல்வரான மாயாவதி, மாநிலத்தை நான்காக பிரிப்பது குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் மாநிலத்தை பிரிப்பது குறித்த கருத்துகள் எழுந்தன. இந்தச் சூழலில் அமைச்சர் ஓம் பிரகாஷ் இதை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT