புதுடெல்லி: ரயில் பயணங்களின்போது மொபைல்போன் ஸ்பீக்கரில் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ள தெற்கு ரயில்வே, மீறுவோருக்கு அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ரயில் பயணங்களின்போதும், ரயில் நிலையங்களில் இருக்கும்போதும் மொபைல்போன்கள் மூலம் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இது அருகிலுள்ள இதர பயணிகளுக்கு தொல்லையாக இருக்கும் என்பதால், இத்தகைய செயல்களுக்கு ரயில்வே திருத்தச் சட்டத்திற்கு இணங்க அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி தெற்கு ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ மொபைல்போன்கள் மூலம் அதிக ஒலியுடன் பாடல்களைக் கேட்பது மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பயணிகள் மத்தியில் ஏற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விழிப்புணர்வு வாசகம் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் இருக்கும். ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்குமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்கள் ரயிலிலிருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ வெளியேற்றப்படலாம் என்று எச்சரித்துள்ள தெற்கு ரயில்வே, மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அபராதம் விதிக்கும் அதிகாரம் ரயிலில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை ரயில் பெட்டியிலிருந்து வெளியேற்றவும் பொதுவான விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.