புதுடெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
ரஷ்யாவிடம் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கான இறக்குமதி வரிகளை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் ஹெச்1பி விசா கட்டண உயர்வு ஆகியவை இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தின. இதனால் அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தார். அதன்பின் இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது, இது இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் இருதரப்பு உறவுகளை சீரமைக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று இந்தியா வந்தார். முதல் பயணமாக கொல்கத்தா சென்ற அவர், புனித அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பின் தலைமையகமான ‘மதர் ஹவுஸ்-க்கு’ சென்றார். பின் அவர் நேற்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்தனர்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு, இரு நாட்டு மக்கள் இடையோன தொடர்பு, மேற்கு ஆசியா நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ ஆலோசனை நடத்தினர். பின்னர், பிரதமர் மோடி அமெரிக்கா வர வேண்டும் என அதிபர் ட்ரம்ப் சார்பில் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்த செய்தியில், ‘‘அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இருதரப் உறவுகள், சர்வதேச விவகாரம் குறித்து ஆலோசித்தோம். உலக நன்மைக்காக இரு நாடுகளும் எப்போதும் இணைந்து செயல்படும்’’ என குறிப்பிட்டார்.