மும்பை: அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஜனவரியில் அங்கு ரூ.85-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.155-க்கு விற்கப்படுகிறது.
இந்த சூழலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்கள் மற்றும் செனட் அவையின் 35 இடங்களுக்கு வரும் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டீசல் விலை உயர்வால் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. டீசல் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ரஷ்யாவில் இருந்து டீசலை கொள்முதல் செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெருமளவு டீசலை கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 3 நாட்கள் பயணமாக நேற்று மும்பை வந்தார். குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு அவர் நேரடியாக செல்கிறார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரை சந்தித்துப் பேச உள்ளார்.
முன்னதாக, மும்பையில் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் மும்பை தாஜ் மஹால் பேலஸ் ஓட்டலில் உள்ள நினைவிடத்தில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மார்கோ ரூபியோ அஞ்சலி செலுத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவை களையப்படும்.
வெகு விரைவில் அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இது மிகச் சிறந்த வணிக நடவடிக்கை ஆகும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் இந்தியா “சூப்பர் பவராக” உருவெடுத்திருக்கிறது. வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்களுக்கு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.