புதுடெல்லி: இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் நமது அண்டை நாடுகளை விட மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது: பல மாத மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தம் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்.
ஆனால், ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மக்களை திசைதிருப்பும் வகையில் செயல்பட முயற்சிக்கிறார். நாட்டின் முன்னேற்றத்தில் அவருக்கு அக்கறை இல்லை. இந்தியாவின் வளர்ச்சியை கண்டு ராகுல் காந்தி ஏன் எரிச்சலடைகிறார்? தனது எதிர்மறையான மனப்போக்கின் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
முதலில் அறிவித்தது ஏன்? - இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏன் முதலில் அறிவித்தார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியா மீது கூடுதல் இறக்குமதி வரிகளை விதித்ததே அமெரிக்காதான். எனவே, அந்த வரிக் குறைப்பு குறித்த அறிவிப்பை அவர்கள்தான் முதலில் வெளியிட வேண்டும் என்பதுதானே முறை. எனவே, அதில் எந்தத் தவறும் இல்லை.
இந்த ஒப்பந்தம் விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகளின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும். அதேபோல், ஜவுளி, ஆபரணங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.