புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா இயக்குனர் சாமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த சம்மன் டெல்லியில் உள்ள மூன்று நீதிமன்றங்களுக்கு அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் அனுப்பி உள்ளது. இதற்கு இந்திய சிவில் சட்டம் அனுமதி அளிக்கிறது.
வழக்கின் பின்னணி என்ன?
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் கடந்த 2023-ல் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா கடந்த 2024-ல் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு அண்மையில் சிறை தண்டனை அறிவித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.