புதுடெல்லி: அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள தாத்ரியில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டது.
பாஜகவும் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்துவிட்டது. இதனால் உ.பி. தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. இது குறித்து பாஜக தலைவர் நிதின் நவீன் இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகிக்கிறார். அவரது தலைமையின் கீழ்தான் மாநில அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
2027 சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்ய நாத்தே பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். மாநிலத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடிப்போம். ஒரு காலத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், குற்றச் செயல்களுக்குப் பெயர் பெற்றிருந்தது உ.பி. இப்போது சிறந்த சட்டம், ஒழுங்கு மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குப் பெயர் பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு நிதின் நவீன் கூறியுள்ளார்.
உ.பி.யில் கடந்த 2017-ல் பாஜக முதல் முறையாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியா பதவியேற்றார். முதல்வராகும் கனவில் இருந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்துள்ளதால் கேசவ் பிரசாத் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
முன்னதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மத்திய அமைச்சராவார். பிரதமர் மோடிக்குப் பிறகு அப்பதவிக்கு ஆதித்யநாத் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாயின. அப்போதுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆதித்யநாத் சந்திப்பு நடந்தது. இந்தச் சூழலில் நிதின் நவீன் வெளியிட்டுள்ள அறிவிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.