லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2017-ம் ஆண்டிலிருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ம் ஆண்டில் மட்டும் மிக அதிகமான குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டில் மட்டும் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா, 2017 மார்ச் முதல் 2025 டிசம்பர் 29 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் கிளீன்' நடவடிக்கைகளின் முழு விவரங்களை வழங்கினார். அதன்படி, நடப்பு 2025-ம் ஆண்டில் மட்டும் 2,739 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 48 குற்றவாளிகள் கொல்லப்பட்டதோடு, 3,153 பேர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 2018-ல் 41 பேர் கொல்லப்பட்டதே ஒரு ஆண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த எட்டு ஆண்டுகால யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இதுவரை மொத்தம் 266 குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், குற்றவாளிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் இதுவரை 18 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கவுன்டர்கள் மட்டுமன்றி, சட்டவிரோத மதமாற்றம் மற்றும் பசு கடத்தலுக்கு எதிராகவும் காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் 475 சட்டவிரோத மதமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 1,197 பசு கடத்தல் வழக்குகள் பதியப்பட்டு 3,128 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கேங்ஸ்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்குச் சொந்தமான சுமார் 7.38 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் இல்லை என்று கூறிய டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா, குற்றவாளிகள் தப்பிக்க முயலும்போது அல்லது போலீசாரைத் தாக்கும்போது மட்டுமே தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக விளக்கமளித்தார். உ.பி. அரசின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.