லக்னோ: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது. இதற்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜன் ஆக்ரோஷ் மகிளா பாதயாத்திரை’ (மக்கள் சீற்ற மகளிர் நடைபயணம்) நிகழ்வில், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முதல்வரின் இல்லத்திலிருந்து சட்டப்பேரவை வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில், பெண் அமைச்சர்கள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். இந்த நடைபயணத்திற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நடைபயணம் குறித்து பேசிய உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஷிஷ் படேல், "நாட்டின் பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கக்கூடாது என்ற, பெண்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத ஒரு நிகழ்ச்சி நிரலை எதிர்க்கட்சிகள் வகுத்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் இணைந்து அதன் செயலாக்கத்தை முன்னெடுத்தபோது, எவ்விதமான சர்ச்சையும் எழவில்லை. ஆனால், இந்த மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவரும் போது, எதிர்க்கட்சிகள் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. நாட்டின் பெண்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெறக்கூடாது என்பதே, பெண்களுக்கு எதிரான அவர்களின் அறிவிக்கப்படாத மறைமுகத் திட்டமாகும்” என்றார்.
இதுகுறித்து துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கருத்து தெரிவிக்கையில், “எதிர்க்கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து நிறுத்திய விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது குறித்துப் பெண்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இதற்கான விலையை வரவிருக்கும் தேர்தல்களில், சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் நிச்சயம் கொடுப்பார்கள்” என்றார்.