கோரக்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடைபெற்ற 'ஜனதா தர்ஷன்' நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
அப்போது சுமார் 200 பேரைச் சந்தித்த அவர், அவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது,"கவலைப்பட வேண்டாம் உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் உறுதியளித்தார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட நிர்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பிய முதல்வர் யோகி ஆதித்யநாத், புகார்கள் மீது உரிய காலத்தில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்ட அவர், மற்றவர்களின் நிலத்தை வலுக் கட்டாயமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.