லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அனைத்து கோட்ட தலைமையகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அமைப்பதற்கான ஒப்புதலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இன்று வழங்கியது.
நாளை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை உத்தரப் பிரதேசத்தின் அனைத்து கோட்ட தலைநகரங்களிலும் நிறுவுவதற்கான ஒப்புதலை அம்மாநில அமைச்சரவை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் இல்லாத 18 கோட்ட தலைமையகங்களில் மாநில அரசின் முழு நிதி உதவியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த அதி நவீன மையங்கள், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, அடையாளம் காணல், மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களை ஏற்பாடு செய்தல், உதவி சாதனங்களை பழுது பார்த்தல், செயற்கை உறுப்புகள் பொருத்துதல், நடை பயற்சி போன்ற சேவைகளை வழங்கும்.
அதோடு, அரசாங்க நலத்திட்டங்களை அணுகுதல், மாற்றுத்திறனாளி சான்றிதழ்களை அளித்தல், தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குதல், பிசியோ தெரபி சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்ற மருத்துவ சேவைகளை அளித்தல் போன்றவற்றையும் இந்த மையங்கள் வழங்கும். மாற்றுத்திறனாளிகள் யாரும் சமூக நீரோட்டத்திற்கு வெளியே விடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவை மட்டுமின்றி, உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 37 மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள், தேசிய வெப்ப மின் கழகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும் ஒரு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவற்றையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.