செங்கார் |கோப்புப் படம்
துபுதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றவாளி ஒரு தனி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 23 தேதியிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். எனவே, அந்த உத்தரவின்படி செங்கார் விடுவிக்கப்பட மாட்டார்’ என்று கூறினார்.
போக்சோ சட்டத்தின் கீழ் 'அரசு ஊழியர்' என்ற வரையறையில் தெளிவின்மை இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு கிராம நிர்வாக அதிகாரி அல்லது காவலர் போக்சோ சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தண்டிக்கப்படலாம். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழியராகக் கருதப்பட மாட்டார் என்று குறிப்பிட்டனர்.
சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செங்கார் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்ததாகவும், போக்சோ சட்டத்தின் கீழும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைக் கொன்ற குற்றத்துக்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.
2017 உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த செங்காரின் ஆயுள் தண்டனையை டிசம்பர் 23 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது. அவர் ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் சிறையில் கழித்துவிட்டதாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் டிசம்பர் 2019 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செங்கார் மேல்முறையீடு செய்திருந்தார்.
செங்காரின் தண்டனையை நிறுத்திவைத்த உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதி கோரி கலந்துகொண்டார். இந்தச் சூழலில், செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.