சிவராஜ் சிங் சவுகான்
புதுடெல்லி: “இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட விரும்பவில்லை. இண்டியா கூட்டணி முன்பே சிதைந்துவிட்டது” என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உத்தி வகுப்பதற்காகவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) குறித்து விவாதிக்கவும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று கூடியுள்ளது.
இந்தக் கூட்டத்தை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட விரும்பவில்லை.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த கூட்டணி சிதைந்துவிட்டது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லிக்கு வராமல் இணையவழியில் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்” என்றார்.
பின்னர், பேசிய அவர், “சொந்தக் கட்சியான காங்கிரஸே ராகுல் காந்தியை ஒரு தலைவராக அங்கீகரிக்காதபோது, நாட்டு மக்கள் எப்படி அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள்? தேர்தலில் தோற்றுவிட்டால் பிரதமர் மீதும், தேர்தல் முறை மீதும் பழி போடுவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் இறந்தோரின் பெயர்களையும், இரட்டைப் பதிவுகளையும் நீக்குவதில் என்ன தவறு இருக்கிறது? நாட்டின் குடிமகனாகவே இல்லாத ஒருவரின் பெயர் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்? ஜனநாயகத்தின் அடிப்படையே சரியான வாக்காளர் பட்டியல்தான்” என தெரிவித்தார்.