புதுடெல்லி: கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தற்போது எல்பிஜி விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதுடன், நிலுவையில் இருந்த சிலிண்டர் முன்பதிவுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து, இந்தக் கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகர்ப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
பின்னர், எல்பிஜி விநியோகம் சீரடைந்ததையடுத்து, நகர்ப்புறங்களி்ல் சிலிண்டர் முன்பதிவு 25 நாட்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறை தளர்த்தப்பட்டது. அதேசமயம், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறை தளர்த்தப்படவில்லை. இந்நிலையில், கிராமப்புறங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் அமைச்சர் தனது பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
மேலும், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் எல்பிஜி விலை உயர்வுக்கும் வழிவகுத்தது. மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், ஜூன் மாதத்திலும் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை தற்போது ரூ.957.50 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.