இந்தியா

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பா? - பியூஷ் கோயல் விளக்கம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கவலை எழுப்பி உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக அந்நாட்டு பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும் விவசாயம், நிலக்கரி, தொழில்நுட்பம் உள்பட 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியை இந்தியா மேற்கொள்ளும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்ற மக்களவையில் இதற்கு பதில் அளித்துப் பேசிய பியூஷ் கோயல், ‘‘கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்தது முதல், இரு நாடுகளும் சமமான மற்றும் லாபகரமான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து விவாதித்து வருகின்றன.

          

கடந்த ஓராண்டில், இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களும் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. அந்தந்த பொருளாதாரங்களைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரத் துறைகளைப் பாதுகாக்க சிறந்த முடிவை விரும்புவது இயல்பானது. வேளாண்மை மற்றும் பால்வளம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கும் சில முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் இருந்தன. ஓராண்டு கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர்.

கடந்த 2ம் தேதி, பிரதமரும் அமெரிக்க அதிபரும் தொலைபேசி மூலம் பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அதன் பிறகு இந்திய பொருட்களுக்கான வரிகளை 18% ஆகக் குறைப்பதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிட்டார். இது பல போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளை விடக் குறைவு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இது அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் போட்டியிட உதவும்.

இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. விவசாயத்துறையின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.

மேலும், இந்த ஒப்பந்தம் சிற, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் திறன் மேம்பாட்டுக்கும் உதவும். உலகுக்காக இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக இந்தியாவில் வடிவமைப்போம், உலகுக்காக இந்தியாவில் புதுமைகளை படைப்போம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த ஒப்பந்தம் உதவும். வளர்ச்சியடைந்த இந்தியாவை 2047க்குள் உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படி இது.

இயல்பான கூட்டாளிகளான இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளை இது குறிக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணப் பணிகளை இரு தரப்பினரும் விரைவாக முடித்து, பலன்களைப் பெற வழிவகை செய்வார்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

எரிசக்தி வளங்களை மத்திய அரசு பன்முகப்படுத்தும். மேலும், பொதுமக்களுக்கான எரிசக்தியை பாதுகாக்கும். 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் பாதையில் பயணிக்க, எரிசக்தி மற்றும் அணுசக்தி துறைகளில் நாம் நமது திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த துறைகளில் அமெரிக்கா ஒரு முன்னணி நாடாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் பல துறைகளின் ஏற்றுமதி அதிகரிக்கும். இது பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் சாதகமானது’’ என தெரிவித்தார்.

பியூஷ் கோயல் பேச்சுக்கு இடையூறு செய்யும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்த வாரம் கூட்டறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT