மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மும்பை: இந்தியாவும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் வரும் டிசம்பருக்குள் கையெழுத்திட உள்ளன. மேலும் இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நிறை வடைந்துள்ளதாக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருந்தன. இந்நிலையில் மும்பையில் பட்டயக் கணக்காளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: கிட்டத்தட்ட பூஜ்ஜிய வரியுடன், ஒட்டு மொத்த ஐரோப்பிய சந்தையும் இனி நமக்காக திறக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் டிசம்பருக்குள் கையெழுத்தாகி, அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளில் சுமார் 93 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்குள் சுங்கவரி இல்லாமலே நுழைய முடியும். அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் ஒயின்களின் விலை குறையும். இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் மூன்றில் ஒருபங்கையும் கொண்டுள்ளன.
பிரான்சில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் இந்தியாவுடன் முன்மொழியப் பட்டுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்ய கனடா பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ஜேமிசன் கிரீர், வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த வாரம் இந்தியா வர உள்ளார். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.