புதுடெல்லி: பாரத் டாக்ஸி சேவையை உருவாக்கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கும் என மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பாரத் டாக்ஸி சேவை திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இது நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையாகும். இந்நிலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் 5-ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவை ‘பாரத் டாக்ஸி’ சேவையாகும்.
அதே முறையை பின்பற்றி, மத்திய அரசு விரைவில் ஒரு கூட்டுறவு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தையும், ஒரு பொதுப்பயன்பாட்டு கூட்டுறவு அமைப்பையும் தொடங்கும். இஃப்கோ-டோக்கியோ காப்பீடு மாதிரியின் வெற்றியைத் தொடர்ந்து, கூட்டுறவு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தையும் நிறுவ உள்ளோம். இது காப்பீட்டுத் துறையில் கூட்டுறவுப் பிரிவை கணிசமாக முன்னேற்றும்.
தற்போது விவசாயக் கடனில் சுமார் 20%, உர விநியோகத்தில் 35%, சர்க்கரை உற்பத்தியில் 21%, பால் உற்பத்தியில் 35% கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பாக உள்ளன. பாரத் டாக்ஸி சேவை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும், 500 நகரங்களிலும் கிடைக்கும். கூட்டுறவு அமைச்சகம் 2021-ம் ஆண்டு உருவாக்கப்படுவதற்கு முன்பு, வேளாண் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
அரசியலமைப்பு சட்டத்தின் படி, கூட்டுறவு என்பது மாநிலப் பட்டியலின் கீழ் வரும். கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட கூட்டுறவு அமைப்புகளில் மத்திய அரசு தலையிடுவதாக எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.