புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து நடைபெறும் டிஜிட்டல் கைது முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: டிஜிட்டல் கைது முறைகேடுகளை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களும், இணைய தளங்களும், வங்கிகளும் எடுத்து வருகின்றன. சிம் கார்டுகளை விரைவாக முடக்குவது, வாட்ஸ்- அப் பயனாளரை பயோமெட்ரிக் முறையில் சரி பார்ப்பது போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் கைது முறைகேட்டில் பயன்படுத்தப்பட்ட 9,400 கணக்குகளை வாட்ஸ்- அப் முடக்கியுள்ளது. டிஜிட்டல் கைது முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் தெற்காசிய நாடான கம்போடியாவில் இருந்து செயல்படுகின்றனர். போலி பயனாளர்களைத் தடுக்க, பயனாளர் பெயர்களை காட்டும் முறை கடந்த ஜனவரி முதல் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.