இந்தியா

பெண்களின் ஆபாச Grok ஏஐ படங்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!

வேட்டையன்

புதுடெல்லி: பெண்களின் புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தின் Grok ஏஐ சாட்பாட் மூலம் ஆபாசமாக ரீ-கிரியேட் செய்யப்பட்ட பதிவுகளை 72 மணி நேரத்தில் நீக்க எக்ஸ் வலைதள நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வசம் அந்நிறுவனம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் Grok ஏஐ நுட்பத்தை பயனர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி, பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரிக்குமாறு கோரி, அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருவதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை வேண்டுமெனவும் சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் மூலம் முறையிட்டார்.

இதையடுத்து இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், எக்ஸ் தளத்தில் Gork ஏஐ-யினை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி, அதன் மூலம் உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள், கண்ணியமற்ற மற்றும் பாலியல் ரீதியான படங்கள், வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என எக்ஸ் தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதை எக்ஸ் தளம் உறுதி செய்ய வேண்டுமெனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இனி இதுபோன்ற ஆபாச மற்றும் சட்ட விரோத கன்டென்ட்களை Grok ஏஐ மூலம் ஜெனரேட் செய்வதை தடுக்கும் வகையிலான கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டுமெனவும், அதற்கு தகுந்த கொள்கைகளை வகுக்கவும், அதை மீறும் பயனர்களின் கணக்கை முழுமையாக முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேகொள்வது அவசியம் எனவும் மத்திய அரசு எக்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து தவறும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கையை எக்ஸ் தளம் எதிர்கொள்ள கூடும் எனவும் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT