புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற திட்டமிட்டுள்ளார். மேலும் சிலரை புதிதாக அமைச்சரவையில் சேர்க்கவும் சிலரை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்து கட்சிப் பணிக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என்றே தெரிகிறது. ஏனெனில், இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய இலாகா மாற்றப்படாது என்றே தெரிகிறது.
நீட் தேர்வு விவகாரத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வேறொரு துறைக்கு மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜுவின் அறைக்கு அருகிலேயே இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய அறை கேபினெட் அமைச்சர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவது வழக்கம்.
மேலும் மத்திய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் அல்கா குர்ஜர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. பெண்கள் பட்டியலில் தமிழக பாஜகவினருக்கும் இணை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோல, தென்னிந்தியாவுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற புகார் உள்ளது. தற்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் மூவர் கேபினெட் அமைச்சர்கள், ஏழு பேர் இணை அமைச்சர்கள் ஆவர். எனவே, கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏற்கப்பட உள்ளது.
பிஹாரின் எல்ஜேபி தலைவரும் மத்திய உணவு அமைச்சருமான சிராக் பாஸ்வான், தனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைச்சகத்தைக் கோருகிறார். மகாராஷ்டிராவில், 13 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பும், அமைச்சரவையில் கூடுதலாக ஒரு இடம் கோரி வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் ஆலோசனை செய்திருந்தார். சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளின் இரு பிரிவுகள் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவான தீர்வு காண்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க முடிவு செய்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.