புதுடெல்லி: மக்களவையில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. 29-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
கடந்த முறை பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்படி, ஓராண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. இன்றைய பட்ஜெட்டில் நிலைக்கழிவு ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறு, சிறு விவசாயிகளுக்கான ஆண்டு நிதியுதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ மானியத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான மானிய உதவி, மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு வரம்பு ஆகியவையும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பதால், அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
2017 முதல் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், அம்ரித் பாரத், வந்தே பாரத் உட்பட 300-க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.