புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10-ம் தேதி, உமர் முகமது நபி என்ற மருத்துவர் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அல் பலா பல்கலைக்கழகத்தில் இருந்து வெறும் 900 மீட்டர் தொலைவில் நிலத்துக்கு அடியில் ஒரு மதரஸா செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 4,000 - 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மதரஸா தரை மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி கீழே உள்ளது. அதன் 3 அடி அமைப்பு மட்டுமே வெளியில் தெரிகிறது. இதன் வடிவமைப்பு வழக்கமான மதரஸாவுடன் பொருந்தாமல் உள்ளது. இந்த மதரஸாவுக்கு குழந்தைகள் அடிக்கடி செல்வார்கள் என்று அருகில் வசிப்பவர்கள் கூறினர்.
இந்த சொத்து இஷ்தேயாக் என்ற மவுலானா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், உமர் நபியின் கூட்டாளிகளில் ஒருவரான முஸம்மில் ஷகீலுக்கு ஓர் அறையை வாடகைக்கு கொடுத்தவர் ஆவார். மதரஸாவுக்கு முஸம்மில் ஷகீலும் நிதி கொடுத்துள்ளார். இவரைப் பற்றிய விசாரணையில் மவுலானா பெயர் வெளியானதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி குண்டு வெடிப்புடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.