புதுடெல்லி: ஐ.நா. தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற சின்மயா அம்ரித் மகோத்சவ உலகளாவிய மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஐ.நா. உலகளாவிய நெருக்கடிகளுக்கு ஒரு பார்வையாளராக இல்லாமல், வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். தீவிரவாதம் உலக அமைதிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல்.
அதை அரச ராஜாங்க முடிவுகளின் ஒரு கருவியாக பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிதி, எரிபொருள், உணவு மற்றும் உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய “4எப் நெருக்கடியை” உலக தெற்கு நாடுகள் எதிர்கொள்கின்றன.
இதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் வளர்ந்த நாடுகளுக்கும் பங்கு உண்டு. சர்வதேசப் பொருளாதாரத்தில் உள்ள அபாயங்களைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உலகை மாற்றியமைக்கும். அதேவேளையில், அதன் வளர்ச்சியையும் தாக்கத்தையும் ஒரு சிலரின் கைகளில் விட்டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.