உமர் நபி, புர்கான் வானி
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே் கடந்த 10-ம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி வெடிபொருள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.
இதுகுறித்து, இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: உமர் நபிக்கு 9 மொழிகள் தெரியும். தீவிரவாத குழுவில் மிகவும் படித்த மற்றும் புத்திசாலி நபராக அவர் இருந்தார். கைதாகி உள்ள முஜம்மில் ஷகீல் தனது வாக்குமூலத்தில், “உமர் நபி எப்போதும் உண்மை, ஆய்வுத் தகவல் அடிப்படையில்தான் பேசுவார். அதிகம் பேசமாட்டார். அவர் எப்போதும் அமீர் (இளவரசன்) என்றே தன்னை அழைத்துக் கொண்டார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மோசமான சூழலில் இருப்பதாக அவர் கூறிவந்தார். காஷ்மீரில் கடந்த 2016-ல் பாதுகாப்பு படையினரால் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதற்கு அவர் பழிவாங்க விரும்பினார்.
மேலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, 2023 ஜூலையில் ஹரியானாவின் மேவாட்-நூ பகுதியில் நடந்த வன்முறை, 2023 மார்ச்சில் பசு பாதுகாவலர்களால் இருவர் கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளும் அவரை விரக்தி அடையச் செய்தன” என்று கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.