இந்தியா

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட உமா பாரதி எதிர்ப்பு - திரிணமூல் எம்எல்ஏ பதிலால் சர்ச்சை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கு பாஜக மூத்த தலைவர் உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ அளித்த பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பரத்பூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ஹுமாயூன் கபீர். இவர் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை தனது தொகுதியில் கட்டப்போவதாக அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா டிசம்பர் 6-ல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், ம.பி. முன்னாள் முதல்வருமான உமா பாரதி கூறுகையில், “ இந்து மதத்தை அழிக்கும் எண்ணத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் இந்து மதம் இன்னும் இங்கு உள்ளது. காபூலில் மிக மோசமான நிலையில் பாபரின் சமாதி உள்ளது. பாபர் பெயரில் மசூதி கட்டுவது இந்து, முஸ்லிம்களுடன் நமது தேசத்திற்கும் அவமானம். இதன் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் டிசம்பர் 6-ல் ஏற்பட்ட நிலையே இதற்கும் நிகழும்" என எச்சரித்தார்.

இதற்கு திரிணமூல் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் காட்சிப் பதிவை மேற்கு வங்க பாஜக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ஹுமாயூன் கபீர் கூறுகையில், "பாபர் மசூதி கட்டுவதை தடுக்க முயற்சிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். நாங்கள் இங்குள்ள மக்கள் தொகையில் 37% உள்ளோம். இது, அடுத்த 3 வருடங்களில் பாபர் மசூதி கட்டப்படும்போது 40% ஆக உயரும்.

எங்களை தடுக்க முயன்றால் நாங்கள் தியாகிகளாக தயங்க மாட்டோம். 100 தியாகிகளை 500 ஆக உயர்த்துவோம். இது அயோத்தி அல்ல, முர்ஷிதாபாத்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை மேற்கு வங்க பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மாநில பாஜக முன்னாள் தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், “பாபரின் ரத்தம் ஹுமாயூன் கபீர் நரம்புகளில் இன்னும் ஓடுகிறது, அதனால்தான் அவர் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவது பற்றி பேசுகிறார்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT