புதுடெல்லி: இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும். இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
இதன் அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2025-26-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் ம.பி.யில் மட்டும் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-ல் 14,71,473 ஆக இருந்தது. அது 2025-26-ல் 14,66,682 ஆகக் குறைந்துள்ளது.
ம.பி.யை தொடர்ந்து தெலங்கானாவில் 1,392 பள்ளிகளும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 568 பள்ளிகளும் மூட்டப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 474, தமிழ்நாட்டில் 369, கர்நாடகாவில் 281, இமாச்சல பிரதேசத்தில் 266 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், பிஹாரில் 946, சத்தீஸ்கரில் 234, டெல்லியில் 87 பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த மூன்று மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.