குறியீட்டுப் படம்

 
இந்தியா

ஏமன், சோமாலியா அருகே 22 இந்தியர்களுடன் 2 கப்பல்கள் கடத்தல்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் நடந்த தனித்தனிச் சம்பவங்களில் 22 இந்தியர்களுடன் 2 கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள தகவல்: எரித்ரியா நாட்டு கொடியுடன் கூடிய எம்.டி. சிபு 1 என்ற எண்ணெய் டேங்கர் கப்பல், ஆகஸ்ட் 20 அன்று ஏமன் கடற்கரையில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இந்த கப்பலில் 20 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில், 16 பேர் இந்தியர்கள். சிரியா, சூடான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும், எந்த நாட்டவர் என இதுவரை தெரியாத ஒருவரும் கப்பலில் இருந்தனர்.

எஸ்.கே.எஸ். கிருஷி மரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் அளித்த தகவலின்படி, ஆயுதம் ஏந்திய ஆறு கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறி, அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். சமீபத்திய தகவலின்படி, இந்திய கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

கேமரூன் நாட்டு கொடியுடன் கூடிய லுட்டுப் என்ற சரக்குக் கப்பல் கடந்த 17-ம் தேதி சோமாலியாவின் பண்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் இருந்த 10 ஊழியர்களில் 6 பேர் இந்தியர்கள்.

ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் இரண்டு சிறிய படகுகளில் வந்த 8 கடற்கொள்ளையர்கள் இந்தக் கப்பலில் ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இவ்வாறு கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT