புதுடெல்லி: அதிக போக்குவரத்து உள்ள சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி, ஹவுரா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய பெருநகரங்களை இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட ரயில் பாதைகளில் (எச்டிஎன்) 5, 6-வது ரயில் பாதைகளை அமைக்கும் திட்டம் தொடர்பான ஆலோசனையை ரயில்வே அமைச்சகம் அண்மையில் தொடங்கியுள்ளது. இவ்வாறு 5, 6-வது ரயில் பாதைகள் அமைப்பதன் மூலம் இந்த பாதைகளில் அதிக பயணிகள், சரக்கு ரயில்களை இயக்க முடியும்.
இந்த 4 நகரங்களை இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட ரயில்வே தடங்கள் (எச்டிஎன்) 11,051 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. இதுதான் ரயில்வேயின் முதுகெலும்பாக உள்ளது. ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கில் 16 சதவீத பங்கை இந்த 4 நகரங்களை இணைக்கும் ரயில் பாதைகள் வழங்குகின்றன. இந்தப் பாதைகள் மூலம் 41 சதவீத ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.
டெல்லி - ஹவுரா (1,422 கிலோ மீட்டர்), ஹவுரா - மும்பை (2,039 கிலோ மீட்டர்), டெல்லி - மும்பை (1,321 கிலோ மீட்டர்), டெல்லி - குவாஹாட்டி (1,875 கிலோ மீட்டர்), டெல்லி - சென்னை (2,041 கிலோ மீட்டர்), ஹவுரா - சென்னை (1,117 கிலோ மீட்டர்), மும்பை - சென்னை (1,238 கிலோ மீட்டர்) ஆகிய 7 பாதைகள் அதிக ரயில் போக்கு வரத்துப் பாதைகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தடங்களில் தான் தற்போது, 5, 6-வது ரயில் பாதைகளை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே மண்டல மூத்த அதிகாரிகளை ரயில்வே வாரிய அதிகாரிகள் அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரட்டை ரயில் பாதைகள், மல்ட்டி டிராக்கிங், 5, 6-வது ரயில் பாதைகள் அமைத்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே மண்டலங்கள் சார்பாக திட்ட அறிக்கையையும் தயாரித்துத் தருமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.