புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சரவை செயலர் டி.வி.சோமநாதனுக்கு தேர்தல் ஆணையர்கள் ஷுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தனித்தனியே கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த விவகாரம் இப்போது தெரியவந்துள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான செயல்பாடு காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி, சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன.
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு தொடக்க புள்ளியாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி அமைந்தது. அதில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முக்கிய முடிவுகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் ஷுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முரண்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சரவை செயலர் டி.வி.சோமநாதனுக்கு தேர்தல் ஆணையர்கள் ஷுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தனித்தனியே கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த விவகாரம் இப்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தை கடந்த ஜூலை 29-ம் தேதி அவர்கள் எழுதி உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதன் முக்கிய விவரங்கள்:
>> அமைச்சரவைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதங்களில், மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் குறித்தும், அவர் மூத்த அதிகாரிகளிடையே பணி ஒதுக்கீட்டை மாற்றியமைத்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
>> அந்த மாற்றங்களை ஆணையத்துடனோ அல்லது அது தொடர்பான அதிகாரிகளுடனோ எந்தவித முன் ஆலோசனையும் இன்றி மேற்கொண்டதாக இருவரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
>> துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் விடுப்பில் சென்ற காரணத்தால் நிர்வாக பிரிவை கையாளும் கூடுதல் பொறுப்பு மணீஷ் கார்க் வசம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
>> அவர் பொறுப்பேற்ற சில மணி நேரங்களில் அதிகாரிகளிடையே பணி ஒதுக்கீட்டை மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
>> மணீஷ் கார்கின் செயல்பாடு விதிகளுக்கு புறம்பானவை என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
>> நிர்வாக பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கோப்புக்கான அக்சஸ் மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்று கோரியுள்ளனர்.
>> இந்த கடிதங்களுக்கு அமைச்சரவை செயலர் பதில் கொடுத்துள்ளார். அதில், மணீஷ் கார்க் பணி தொடர்பான கடிதம் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அதன் மீதான நடவடிக்கை அல்லது விசாரணை குறித்த தகவல் எதுவும் ஆர்டிஐ பதிலில் இடம்பெறவில்லை.