ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கொலைக் குற்றவாளிகளுக்கு இடையே காதல் மலர்ந்ததை அடுத்து, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 34 வயதாகும் பிரியா சேத் என்பவர், ஒரு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவரை சந்தித்து அவரை தனது வலையில் சிக்க வைத்து பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அவரை கொலை செய்துள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து பிரியா சேத், ஜெய்ப்பூரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹனுமன் பிரசாத் (29) என்ற இளைஞர், சந்தோஷ் ஷர்மா என்பவரின் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார். பின்னர், அந்த பெண்ணுடன் சேர்ந்து சந்தோஷ் ஷர்மாவுக்கும் அவர்களது மூன்று மகன்கள் மற்றும் ஒரு மருமகளுக்கும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஹனுமன் பிரசாத்துக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவரும் ஜெய்ப்பூரில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூரின் சங்கானேர் திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், பகலில் சிறை அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பின் காரணமாக, பிரியா சேத்தும், ஹனுமன் பிரசாத்தும் சிறை வளாகத்தில் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அவர்களது நட்பு பிறகு காதலாக மாறி உள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் பரோல் வழங்க மறுத்ததை அடுத்து, அவர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இருவருக்கும் பரோல் வழங்குவது குறித்து 7 நட்களுக்குள் முடிவெடுக்குமாறு கடந்த 7-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இருவருக்கும் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் வரும் 28-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வர உள்ளனர். வெளியே வந்ததும், ஹனுமன் பிரசாத்தின் சொந்த ஊரான ஆல்வார் மாவட்டத்தின் பரோடாமியோவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.