திரிபுரா மாநில காவல் துறை தலைவர் அனுராக் தன்கர்

 
இந்தியா

திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் காவல் தலைமையகத்தில் தற்கொலை

மோகன் கணபதி

அகர்தலா: திரிபுரா மாநில காவல் துறை தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள காவல் தலைமையகத்தில் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரிபுரா மாநில காவல் துறை தலைவராக இருந்த அமிதாப் ரஞ்சனுக்குப் பிறகு, அந்தப் பொறுப்புக்கு கடந்த மே 2025-ல் நியமிக்கப்பட்டவர் அனுராக் தன்கர். 1994-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐ அதிகாரியாகவும், திரிபுரா மாநில புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர்.

தொழில்முறை அணுகுமுறை, நீண்டகால காவல் துறை அனுபவம் ஆகியவற்றைக் கொண்ட அனுராக் தன்கர், மாநிலத்தின் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக கருதப்பட்டார்.

இந்நிலையில், அகர்தலாவில் உள்ள காவல் தலைமையகத்தில் இன்று அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்டத் தகவலின்படி, அனுராக் தன்கர், தனது சொந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கருதப்படுகிறது.

அவர் உடனடியாக அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது குறித்து கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனை மருத்துவர் பிரதீப் கவுமிக் கூறுகையில், “அவர் மதியம் 12 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அப்போது அவருக்கு நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

சிபிஆர் மூலம் 40 நிமிடங்களுக்கும் மேலாக நாங்கள் முயன்றோம். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பது மதியம் 12.48 மணிக்கு அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறக்கான சரியான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

அனுராக் தன்கர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்கான அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் காவல்துறை தலைவர் ஒருவரே தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT