புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர்.
திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையன் தலைமையிலான இக்குழுவில் மக்களவை எம்.பி.க்கள் சதாப்தி ராய், கல்யாண் பானர்ஜி, பிரதிமா மோண்டல், சஜ்தா அகமது, மகுவா மொய்த்ரா, கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் டோலா சென், மம்தா தாக்குர், சாகேத் கோகலே, பிரகாஷ் சிக் பாரிக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியுடன் நேரடித் தொடர்புடைய 17 பில்ஓக்கள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பட்டியலை அளித்தோம். உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது என்று கூறினோம். பட்டியலை பார்த்து தலைமை தேர்தல் ஆணையர் முற்றிலும் வியப்படைந்தார்’’ என்றார்.
எஸ்ஐஆர் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மம்தா பானர்ஜி தனது கடிதத்தில், எஸ்ஐஆர் பணிகளில் தனியார் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களை ஈடுபடுத்துவது மற்றும் தனியார் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச் சாவடி அமைக்கும் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.