மத்திய அமைச்சர் அமித் ஷா
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தருகிறது. ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், எல்லை வேலி அமைப்பதற்காக பிஎஸ்எப் படைகளுக்கு திரிணமூல் அரசு நிலம் வழங்க மறுக்கிறது. ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுவதுதான் இதற்குக் காரணம்.
மாநில காவல் துறை சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதில்லை. அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றனர். திரிணமூல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசை நிறுவ வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமைவது அந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.