புதுடெல்லி: “பிஹார், உத்தரப் பிரதேசத்துக்கு பிறகு, மத்தியப் பிரதேசத்தின் சிறைச் சாலைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. விசாரணைக் கைதிகளில் 21 சதவீதம் பேர் பழங்குடியினர்” என்று அம்மாநில எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்ஹார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸின் பழங்குடி முகமும், ம.பி.யின் எதிர்கட்சித் தலைவருமான உமங் சிங்ஹார் கூறியது: “கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் 1.53 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் உள்ளனர். இது மாநிலத்தின் மக்கள் தொகையில் 21.08 சதவீதமாகும்.
இது, இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாகும். ம.பி.யின் சிறைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 132 சிறைகளில் 45,543 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது, பிஹார் மற்றும் உ.பி.க்குப் பிறகு நாட்டில் மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
அதே நேரத்தில், ம.பி.யின் சிறைகளின் மொத்த கொள்ளளவு சுமார் 30,000 மட்டுமே. ஆனால், இதைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்த கைதிகளில் 22,946 பேர், அதாவது சுமார் 50 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள்.
இந்த விசாரணை கைதிகளில் 21 சதவீதம் பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது நாட்டிலேயே மிக அதிகமாகும்.
விசாரணைக் கைதிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல பரிந்துரைகளை அளித்துள்ளது. இதன்படி விரைவான விசாரணைகளையும், எளிமையான பிணை செயல்முறைகளையும் அரசு பின்பற்ற வேண்டும். ம.பி.யின் சிறைக் கைதிகளின் சாதிவாரியான தரவுகளின் அடிப்படையில் அரசும், நீதித் துறையும் தலையிட வேண்டும். வறுமை மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின மற்றும் தலித் மக்கள் தண்டனை விதிக்கப்படாமலேயே சிறைகளில் வாடுகின்றனர்.
விசாரணைக் கைதிகளில் தலித்துகள் 19 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 40 சதவீதமும் உள்ளனர். சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினர் நீண்டகால நீதித் துறை செயல்முறைகளால் விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் வறுமை மற்றும் பிணைத்தொகை செலுத்த இயலாமை காரணமாக பலர் நீண்ட காலம் சிறையில் வாடுவதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
தண்டனை விதிக்கப்படாமல் ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது, வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறுவதாகும்.
விசாரணைக் கைதிகள் மீதான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், பிணை நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், விரிவான சிறைச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இதற்காக, அரசும், நீதித் துறையும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரத் தேவை” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்ஹரின் இந்த அறிக்கை வெளியான பின் பாஜக ஆளும் மாநில அரசு சார்பிலும் சில தரவுகள் வெளியாகி உள்ளன. இதில் அரசு அதிகாரிகளின் புள்ளிவிவரங்களுடன் சில முக்கிய நடவடிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ’ஆதிவாசி மக்களின் நலனுக்காக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வழக்குகளில் பட்டியல் பழங்குடியின உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவதும் அடங்கும்.
மார்ச் 3, 2009 நிலவரப்படி, பட்டியல் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 87,549 வனக் குற்ற வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 35,807 வழக்குகளில், 28,645 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 4,396 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
கடந்த நவம்பர் 15-இல் வந்த பழங்குடியினர் பெருமை தினத்தில் 32 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள்’ என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.