பிரதமர் நரேந்​திர மோடி

 
இந்தியா

“மம்தாவின் மகா காட்டு தர்பார் ஆட்சி பழங்குடியினர் நிலங்களை கைப்பற்றிவிட்டது” - பிரதமர் மோடி

வெற்றி மயிலோன்

புருலியா: “மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கு தங்கள் சொந்த நிலத்தின் மீதே எந்த உரிமையும் இல்லை. மகா காட்டு தர்பார் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸின் சிண்டிகேட் சட்டவிரோதக் கும்பல்கள், பழங்குடியினரின் நிலங்களைக் கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கியப் பழங்குடியின மாவட்டமான புரூலியாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில், மேற்கு வங்கத்தில் வேலையின்மை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. திரிணமூலின் ‘மகா காட்டு தர்பார்’ ஆட்சியே இந்த மாபெரும் நெருக்கடிக்குக் காரணமாகும். திரிணமூல் அமைச்சர்கள் ஆசிரியர் நியமனத்தில் கொள்ளையடித்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸின் முழுமையான 'காட்டு தர்பார்' ஆட்சியில், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. லஞ்சம் கட்டாயமாக்கப்படும்போது, ​​தொழிற்சாலைகள் எப்படிச் செழித்து வளர முடியும்?. எனவே, இம்மாநிலத்தில் தொழித்துறை சார்ந்த சூழலும் மிக மோசமான நிலையில் உள்ளது.

பொதுவாக நான் தேர்தல்கள் குறித்து எந்தக் கணிப்புகளையும் வெளியிடுவதில்லை; தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நான் முன்கூட்டியே கூறுவதில்லை. ஆனால் இம்முறை, நான் யாரைச் சந்தித்தாலும், இந்த முறை பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்றே கூறுகிறார்கள். இவை அனைத்தையும் கேட்ட பிறகு, இந்த முறை பாஜக மாபெரும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

திரிணமூல் காங்கிரஸின் ‘மகா காட்டு தர்பார்’ ஆட்சியில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. சாலைகள், மின்சாரம், குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள். என அனைத்தும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பழங்குடியின மக்களுக்குத் தங்கள் சொந்த நிலத்தின் மீதே எந்தக் கட்டுப்பாடும் இல்லை. திரிணமூல் காங்கிரஸின் சிண்டிகேட் சட்டவிரோதக் கும்பல்கள், பழங்குடியினரின் நிலங்களைக் கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

நெல் விவசாயிகள் இப்போது கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இங்குள்ள பல நீர்ப்பாசனத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. சுபர்ணரேகா திட்டத்தின் நிலையை மட்டும் பாருங்கள். பல ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் கால்வாய்களுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க விவசாயிகளுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் துரோகம் இழைத்துள்ளது. உருளைக்கிழங்கு விவசாயிகளின் அவல நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சந்தைகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அனைத்தும் திரிணமூல் காங்கிரஸின் சிண்டிகேட் கட்டுப்பாட்டில் உள்ளன. பாஜக ஆட்சி அமைத்ததும், இந்தச் சிண்டிகேட் அமைப்பின் ஆதிக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்து, அவர்களைத் துடைத்தெறிவோம். 'இரட்டை என்ஜின் அரசு' அமைவதன் மூலம், விவசாயிகளுக்கு ‘இரட்டைப் பலன்கள்’ கிடைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT