நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள்

 
இந்தியா

‘‘அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்கவைக்கும் ஒப்பந்தம்’’ - எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கக்கூடியது என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஒப்பந்தம் அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

          

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். உலகம் ஒரு உலகளாவிய புயலை எதிர்கொள்கிறது என்பதையும் ஒரு வல்லரசின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதையும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள், எரிசக்தி மற்றும் நிதியை ஆயுதமாக்குகின்றன என்பதையும் அரசே ஒப்புக்கொள்கிறது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்த போதிலும் மத்திய அரசு எதற்காக, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் நிதி அமைப்புகளை ஆயுதமாக்க அனுமதித்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் இது தொடர்பான கூட்டறிக்கை குறித்தும் மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அவையின் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட அனைத்து அலுவல்களையும் நிறுத்திவிட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT