இந்தியா

டெல்லி போராட்டத்தால் வர்த்தகர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, பல பகுதிகளில் உள்ள கடைகளை உள்ளூர் அதிகாரிகள் மூடுமாறு தெரிவித்தனர்.

சில இடங்களில் போலீஸார் மற்றும் நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுத்தனர். இதனால், பல்வேறு இடங்களில் வர்த்தகம் முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக, டெல்லி முழுவதும் சுமார் ரூ.2,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டது.

எனவே, போராட்டங்களின்போது கடைகளை மூடுமாறு வர்த்தகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. சந்தைகள் தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நவராத்திரி மற்றும் ராம்லீலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி பண்டிகையும் நெருங்குகிறது.

இதனால், சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இத்தகைய சூழலில், கடையடைப்பு அல்லது பிற இடையூறுகள் ஏற்பட்டால் விற்பனை பாதிக்கப்படும். எனவே, மீண்டும் இதுபோன்ற இடையூறுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT