இந்தியா

உ.பி. தேர்தலில் பட்டியலின மக்களின் வாக்குகள் யாருக்கு சாதகம்? - ஓர் அலசல்

போத்தி ராஜ்.க

உத்தரப் பிரதேச தேர்தல் களம் எப்போதும் சித்தாந்தங்களாலும், சாதியக் கணக்குகளாலுமே கட்டமைக்கப்படுகிறது. லக்னோவின் அரியணைக்கான சாவியைத் தங்கள் கைகளில் வைத்திருப்பவர்கள் உ.பி.யின் பட்டியலின மக்கள்.

மாநிலத்தின் 84 தனித் தொகுதிகளிலும், 21% மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்த வாக்கு வங்கி, வெறும் எண்களின் விளையாட்டு அல்ல. அது உத்தரப் பிரதேச அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் ஒரு சக்திவாய்ந்த சமூக இயக்கமாகும்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே பட்டியலின வாக்குகளைக் கவர்வதற்கான திட்டங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக வகுத்து வருகின்றன. ஆனால், இந்த முறை பட்டியலின வாக்காளர்களின் மனநிலை முன்னெப்போதையும் விட மிகவும் கூர்மையாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியிருக்கிறது.

ஒருபுறம் பாஜகவின் நலத்திட்ட அரசியல், மறுபுறம் அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’ (PDA) எனப்படும் பிற்படுத்தப்பட்டோர், தலித், ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினரை உள்ளடக்கிய ஃபார்முலா, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் பிடி என்ன ஆகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன.

ஒருகாலத்தில் காங்கிரஸின் வசமே பெரும்பகுதி பட்டியலின வாக்குகள் இருந்தன. ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தேய்ந்து, அதன் பாரம்பரிய வாக்கு வங்கி குறைந்தபோது, அது கான்சிராம் - மாயாவதியின் தன்மான எழுச்சியாக உருவெடுத்தது. இன்று மாயாவதி பட்டியலின மக்களுக்கான அடையாளமாக இருக்கிறாரே தவிர, கடந்த பல தேர்தல்களாகத் தனது வாக்கு வங்கியைத் தக்கவைப்பதில் தோல்வியடைந்துவிட்டார். இதனால், இன்று பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே உத்தரப் பிரதேச பட்டியலின வாக்குகள் ஊசலாடுகின்றன.

2022 தேர்தல் பின்னணி

2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 255 இடங்களில் வென்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி 111 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியானது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, சாதிய அடிப்படையிலான வாக்குகளே ஒரு கட்சியின் வெற்றிக்கு முக்கியத் துணையாக இருக்கின்றன. அந்த வகையில் ஆதிக்க சாதியினரின் வாக்குகளில் பெரும்பகுதியை பாஜக கைப்பற்றியது அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தது (பிராமணர்கள் 89%, தாக்கூர்கள் 87%, வைசியர்கள் 83%). அதேசமயம், ஜாதவ் சமூகத்தினரிடம் 21%, பிற எஸ்சி,எஸ்டி பிரிவினரிடம் 41%, சிறுபான்மையினரிடம் 8% வாக்குகளையே பாஜக பெற்றது.

இந்த முறை இதே பாணியில் வாக்குகளைப் பெறவும், பட்டியலின மக்களிடம் குறைந்திருக்கும் வாக்கு வங்கியை அதிகப்படுத்தவும் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.

மறுபுறம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு ஆதிக்க சாதியினரின் வாக்குகளில் சராசரியாக 15%-க்கு மேல் கிடைக்கவில்லை. இருப்பினும், ஜாதவ் சமூகத்தினரின் வாக்குகளும், தலித் மக்களின் 30% வாக்குகளும் பெரும் உதவியாக அமைந்து, அக்கட்சி 111 இடங்களில் வெல்ல உதவியது. காங்கிரஸ் கட்சியோ ஆதிக்க சாதியினரிடம் 2% வாக்குகளை மட்டுமே பெற்று, பிற பிரிவினரிடையே பூஜ்ஜிய சதவீதத்தையே பெற்று பின்னடைவைச் சந்தித்தது.

சரிவடையும் பகுஜன், காங். நிலை

2007-ல் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தபோது, ஜாதவ் சமூகத்தினரில் 86% பேரும், ஜாதவ் அல்லாத தலித் சமூகத்தினரில் 54% பேரும் அக்கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால், 2022 தேர்தலில், ஜாதவ் சமூகத்தினர் மத்தியில்  65% ஆகவும், ஜாதவ் அல்லாத பட்டியலின சமூகத்தினர் மத்தியில் 27% ஆகவும் குறைந்தது.

காலப்போக்கில் பட்டியலின வாக்குகளின் மீது பகுஜன் சமாஜ் கட்சி கொண்டிருந்த பிடி தளர்ந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் பலவீனம் என்பது பட்டியலினத்தவர்கள் வாக்குகளின் வெறும் சிதறல் மட்டுமல்ல. மாறாக, அதிலிருந்து சிதறிய வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் சென்றுள்ளது. குறிப்பாக, ஜாதவ் அல்லாத தலித்துகளிடையே இது அதிகமாகக் காணப்படுகிறது.

2002 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில், ஜாதவ் அல்லாத தலித்துகளிடையே பாஜகவுக்கான ஆதரவு 28% அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 2007-ல் 30.4%-லிருந்து 2022-ல் 12.8% ஆகக் குறைந்தது. காங்கிரஸைப் பொறுத்தவரை உ.பியில் பட்டியலின மக்கள் ஆதரவை ஒவ்வொரு தேர்தலிலும் படிப்படியாக இழந்து, 2022-க்குள் வெறும் 4% ஆகக் குறைந்துவிட்டது.

பட்டியலின மக்கள் மனநிலை

உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 84 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும். இந்தத் தொகுதிகளே அடுத்த தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் களங்களாகும். பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மண்டலம் மற்றும் ‘பட்டியலினத் தலைநகரம்’ என அழைக்கப்படும் ஆக்ரா உள்ளிட்ட மேற்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களில் பட்டியலின மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச பட்டியலின வாக்காளர்களின் மனநிலையில் மூன்று முக்கிய மாற்றங்களைக் காண்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அவை.

1. அரசியலமைப்பு குறித்த அச்சம்:

பாஜக 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றினால் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, இடஒதுக்கீடு பறிக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பட்டியலின மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2. மாயாவதி மீதான அதிருப்தி:

பாஜகவுக்கு எதிராக மாயாவதி வலுவாகப் போராடவில்லை என்ற எண்ணம் இளைஞர்களிடையே உருவாகியுள்ளது. இதனால், அவர்கள் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

3. பொருளாதார நெருக்கடி:

இலவச ரேஷன் திட்டங்கள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், வேலையின்மை மற்றும் அரசு வேலைகளில் தற்காலிக நியமனங்கள் அதிகரிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலச் சாத்தியக்கூறுகள்:

அகிலேஷ் யாதவின்  ‘பிடிஏ’ வியூகம் வெற்றிபெற்றால், ஜாதவ் மற்றும் ஜாதவ் அல்லாத பட்டியலின வாக்குகள் கணிசமாகச் சமாஜ்வாதிக்கு மாறும். சந்திரசேகர் ஆசாத் போன்ற இளம் தலைவர்களின் தாக்கமும் இதற்கு உதவலாம்.

பாஜக தனது நலத்திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம்தான் இழந்த வாக்குகளை மீட்க முயலும். மாயாவதி தனது பட்டியலின - முஸ்லிம் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்தாவிட்டால், பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேச அரசியல் நீரோட்டத்திலிருந்து முற்றிலும் விலகிச்செல்ல நேரிடும்.

பட்டியலின மக்களின் வாக்குகள் இப்போது ஒரே கட்சியுடன் உறுதியாகப் பிணைக்கப்படவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜின் சரிவிலிருந்து பாஜக கணிசமான பலனைப் பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சியும் குறிப்பிடத்தக்க அளவிலான பட்டியலின மக்களின் ஆதரவைத் தக்கவைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டது என்பதே நிதர்சனம்.

SCROLL FOR NEXT