இந்தியா

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டெக்ஸ்டர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை இன்று மாலை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும், “இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றி நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சினை என்றும் கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் தமிழக அரசு விதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதன்படியே அரசு செயல்படுகிறது என்றும், புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT