புதுடெல்லி: டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று சக்கூர்பூர். இதனால், கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் சக்கூர்பூர் காலனியின் சாலைக்கு, ‘திருவள்ளுவர் மார்க்’ என்று பெயரிடப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சக்கூர்பூர் வழியாக புதிதாக ரோஸ் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதற்கு, ‘திருவள்ளுவர் மெட்ரோ நிலையம்’ என்று பெயரிட வேண்டும் என்று டெல்லி வாழ் தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில், மாநிலப் பெயர் மாற்ற ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளூர் அடையாளங்களை வலுப்படுத்துதல், தேசியத் தலைநகர் முழுவதும் உள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு பாஜக இணை அமைப்பாளர் நாச்சியப்பன், முதல்வர் ரேகா குப்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி வாழ் தமிழர்கள் எழுப்பி வரும் இந்த கோரிக்கையை ஏற்க மாநிலப் பெயர் மாற்ற ஆணையத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இடையில் வந்த கரோனா பரவலில் இது தடைபட்டிருந்தது. எனவே, இந்த நீண்டகால கோரிக்கையை முதல்வர் உடனடியாக நிறைவேற்றும் வகையில், சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக முதல் முயற்சி எடுத்த டெல்லி தமிழர்கள் கலாச்சார இணைப்பின் பொதுச் செயலாளர் எம்.நடேசன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறுகையில், "திருவள்ளுவர் பெயரை வைக்க தமிழக முதல்வராக இருந்த இபிஎஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் ஆதரவுக் கடிதம் அளித்தனர்.
இதற்காக, முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலிடம் நேரிலும், பிரதமர் மோடியிடம் 2018ம் ஆண்டிலும் வலியுறுத்தினோம். இப்பட்டியலில் பாஜகவும் இணைந்து திருவள்ளு வருக்காக வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது. இனி டெல்லி அரசு தாமதிக்காமல் திருவள்ளுவர் பெயரை அறிவிக்கும் என நம்புகிறோம்" என்றார்.