திரிணமூல் காங். எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் |கோப்புப் படம்

 
இந்தியா

மே.வங்கத்தில் பாபர் மசூதி கட்ட டிச.6-ல் அடிக்கல்: திரிணமூல் காங். எம்எல்ஏ ஹுமாயூன் கபிர்

மோகன் கணபதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல் டிச. 6ம் தேதி நாட்டப்படும் என்றும் மூன்று ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபிர், “முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்கா-வில் பாபர் மசூதி கட்டப்படும். இதற்கு, டிசம்பர் 6-ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்படும். அயோத்தியில் இடிக்கப்பட்டது போன்ற ஒரு மசூதியாக இது இருக்கும். அடிக்கல் நாட்டு விழாவுக்கு பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மசூதி மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். ஹுமாயூன் கபிர் கடந்த ஆண்டும் இது குறித்து பேசி இருக்கிறார். பாபர் மசூதி போன்ற ஒரு மசூதி முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்டப்படும் என அப்போது அவர் கூறி இருந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க பாஜக செயலாளர் பிரியங்கா திப்ரேவால், “திரிணமூல் காங்கிரசின் மதச்சார்பின்மை என்பது மதத்தை மையமாகக் கொண்டது. மீண்டும் பாபர் மசூதி கட்டப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். பாபர் மசூதி வேண்டும் என கோரியது யார்? இந்த கோரிக்கையை முன்வைப்பவர்கள் ரோகிங்கியாக்கள்.

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் அவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். வங்கதேச எல்லை வழியாக அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதி கட்டப் போவதாகக் கூறுபவர்களுக்கு, பாபர் எங்கிருந்து வந்தவர் என்பது தெரியுமா? இது தாஜா செய்யும் அரசியல் அன்றி வேறில்லை" என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “இந்தியாவில் வகுப்புவாத அரசியல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலின் உருவகமாக உருவெடுத்திருப்பவர் மம்தா பானர்ஜி. இது துரதிருஷ்டவசமானது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைய இருப்பதால் அவர் அச்சத்தில் உள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டப்போவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கூறி இருப்பது கிரிமினில் அரசியலின் உச்சம். அயோத்தியில் அற்புதமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதை நினைத்து ஒவ்வொரு இந்துவும் மகிழ்ச்சி அடைந்துள்ள தற்போதைய சூழலில், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும் என ஹுமாயூன் கபிர் அறிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜிக்கு இந்துக்கள் மீது இருக்கும் வெறுப்பையும், சட்டவிரோத குடியேறிகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பையுமே இது காட்டுகிறது. மம்தா பானர்ஜியின் சிந்தனையும் சித்தாந்தமும் இப்படி இருப்பது வருத்தத்துக்கும் கவலைக்கும் உரியது.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, “எங்கள் கவனம் வளர்ச்சி அரசியல்தான். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் முன்னேற்றம், சமத்துவம், அனைவரையும் இணைத்துச் செல்லும் அரசியல் ஆகியவை குறித்தே நாங்கள் பேசுவோம். அரசியல் சாசனத்தைப் பற்றியே நாங்கள் எப்போதும் பேசுவோம். இதுபோன்ற அறிவிப்புகள் (பாபர் மசூதி கட்டப்படும் என்ற அறிவிப்பு) தேர்தலுக்கானவை" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT