குமார்கஞ்ச்: மேற்குவங்கத்தில் குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளரை, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஓட, ஓட விரட்டிச் சென்று தாக்கிய சம்பவம் சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது.
மேற்கு வங்கத்தில் நேற்று முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. குமார்கஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்காரை, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வயல்வெளியில் விரட்டிச் சென்று தாக்கும் காட்சியும், அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற போலீஸ்காரரும் சுவேந்து சர்க்கார் பின்னால் ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த வன்முறை குறித்து சுவேந்து சர்க்கார் கூறியதாவது: எனது தொகுதியில் உள்ள 24-ம் எண் வாக்குச் சாவடிக்குச் சென்றபோது, என்னுடன் வந்தவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
தேர்தல் தோல்வி பயம் காரணமாகத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நான் காயம் அடைந்தேன். எனது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.