கூச் பெஹார்: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தின் பாமன் பாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பனேஷ்வர் பர்மன். செங்கல் சூளையில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளியான இவர், தீவிர பாஜக ஆதரவாளர்.
கடந்த 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்த போது, அந்த ஆட்சி அகலும் வரை தனது தலைமுடியை வெட்டப் போவதில்லை என இவர் உறுதி பூண்டார்.
சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தலைமுடியை வெட்டாமல் இருந்த பர்மன், கடந்த வியாழக்கிழமை அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் தலையை மொட்டை அடித்து சபதத்தை முடித்துக் கொண்டார்.
இதுகுறித்து பனேஷ்வர் பர்மன் கூறியதாவது: திரிணமூல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான் முடி திருத்தும் நிலையத்தின் பக்கமே செல்லவில்லை. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, அதிகாலை முதலே தொலைக்காட்சியே கதி என இருந்தேன். பாஜக 100 இடங்களைத் தாண்டிய போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்போது புதிய ஆட்சி வந்துவிட்டது, இனி வளரும் முடியை எப்போது வேண்டுமானாலும் வெட்டிக் கொள்வேன்.
கடந்த 15 ஆண்டுகளில் எங்கள் பகுதியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனது மகன் மற்றும் இரு மகள்கள் என எனது குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே அரசியல் மாற்றத்தை விரும்பினேன். இவ்வாறு பர்மன் கூறினார்.
பர்மன் தனது சபதத்தை முடித்துக் கொண்ட செய்தி காட்டுத் தீயாகப் பரவியதை அடுத்து, கிராம மக்கள் அவர் வீட்டின் முன் திரண்டனர். அவரது மொட்டை அடிக்கும் வைபவத்துக்குப் பிறகு, குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் 'பொரி' வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.